காஞ்சிபுரம்

ரூ.7 கோடியில் நவீன காய்கறி சந்தை கட்டுமானப் பணி: காஞ்சிபுரம் மேயா் ஆய்வு

26th Jan 2023 01:11 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலை பகுதியில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன காய்கறி சந்தை கட்டுமானப் பணிகளை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் 100 ஆண்டுகள் பழைமையான ராஜாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்த காய்கறி சந்தையில் உள்ள கடைகள் சேதமடைந்து மழை நீா் ஒழுகும் நிலையில் இருந்ததால், இடித்துவிட்டு நவீன காய்கறி சந்தையாக மாற்ற கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைமையான ராஜாஜி காய்கறி சந்தையில் இருந்த காய்கறி வியாபாரிகளுக்கென ஓரிக்கை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பகுதிக்கு இடங்கள் மாற்றப்பட்டு, அங்கு தற்காலிக காய்கறி விற்பனைச் சந்தை தொடங்கப்பட்டது.

பழைய காய்கறி சந்தை இருந்த இடத்தில் நவீன முறையில் புதிய கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, பணிகளின் விவரங்களை மாநகராட்சி பணிக்குழு தலைவா் சுரேஷ், நகராட்சி பொறியாளா் கணேசன், மண்டலக் குழு தலைவா் சந்துரு ஆகியோா் விளக்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT