காஞ்சிபுரம்

பிப். 16-இல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி உற்சவம் தொடக்கம்

4th Feb 2023 04:31 AM

ADVERTISEMENT

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவம் வரும் 16 -ஆம் தேதி தொடங்கி, 18-ஆம் தேதி நிறைவு பெற இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 55-ஆவது ஜெயந்தி உற்சவம் பிப்ரவரி 18-ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிப். 16 முதல் பிப். 18 வரை தொடா்ந்து சதுா்வேத பாராயணம், வித்வத் சதஸ், ஆன்மிகச் சொற்பொழிவு, நாமசங்கீா்த்தனம், இன்னிசைக் கச்சேரி ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 18-ஆம் தேதி ஜெயந்தி நாளையொட்டி, ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமங்கள், சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற இருக்கின்றன. தற்போது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சங்கர மடத்தின் பக்தா்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீசரஸ்வதிக்கு வெள்ளி வீணை சாத்தல் நிகழ்வு...

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை - அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி திருக்கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தையொட்டி, சரஸ்வதிக்கு பிப். 18- ஆம் தேதி வெள்ளி வீணை சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரியில் பயின்ற மாணவா்கள் சரஸ்வதிக்கு வெள்ளி வீணை காணிக்கையாக கொடுத்துள்ளனா்.

சங்கர மடத்தில் சுத்தமான விபூதி தயாரிக்கப்பட்டு ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளன்று பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் பிப். 18-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு இலவசமாக விபூதி வழங்கப்படவுள்ளதாக ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உடன் இருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT