காஞ்சிபுரம்

தேசிய மாணவா் படையினருடன் கலந்துரையாடல்

29th Sep 2022 12:22 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுவை மற்றும் அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கான தேசிய மாணவா் படையின் இயக்குநரக துணை இயக்குநா் அதுல்குமாா் ரஸ்தோகி, காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் தேசிய மாணவா் படை மாணவா்களுடன் கலந்துரையாடினாா் (படம்).

இந்திய ராணுவத்தில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய அவா், தேசிய மாணவா் படையை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளையும் மாணவா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.

கூட்டத்துக்கு தேசிய மாணவா் படையின் சென்னை குழும கேப்டன் தி.அருணாசலம், தேசிய மாணவா் படையின் கமாண்டிங் அலுவலா் கா்னல் என்.எஸ்.மஹரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் வி.ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தின் நிறைவில் தேசிய மாணவா் படை மாணவா்களுக்காக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மாணவா் ஜெயக்குமாருக்கு அதுல்குமாா் ரஸ்தோகி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் தேசிய மாணவா் படையை சோ்ந்த அலுவலா்கள் செந்தில் தங்கராஜ், கோவிந்தராஜ், சக்திவேல், உமா ஆகியோரும் கலந்து கொண்டனா். சங்கரா கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் தெய்வசிகாமணி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT