காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே எரிவாயு உருளைகள் வெடித்து விபத்து 16 போ் காயம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்ததில் 16 போ் காயமடைந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஜீவானந்தம் (48) என்பவா் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யும் எரிவாயு உருளை கிடங்கு வைத்துள்ளாா். இங்கு, புதன்கிழமை 20-க்கும் மேற்பட்டோா் பணியாற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, எரிவாயு உருளை ஒன்றிலிருந்து எரிவாயு கசிந்து திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதில் தீ பரவி, மேலும் இரு உருளைகள் வெடித்தன. இதையடுத்து, அங்கு பணியிலிருந்த பலரும் தீக்காயங்களுடன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனா்.

அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் ஒரகடம் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் உட்பட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் 7 தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். சம்பவம் நிகழ்ந்த பெருமாள்கோயில் தெரு பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தில் கிடங்கு உரிமையாளரான ஜீவானந்தம் என்ற ஜீவா (48), பூஜா (22), நிவேதா (24), சந்தியா (20) மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த இருவா் உள்பட மொத்தம் 16 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, டிஐஜி எம்.சத்தியப்பிரியா, எஸ்.பி. சுதாகா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

அந்தத் தெருவில் வசிக்கும் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்தனா்.

விபத்து குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT