காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 16 பேர் காயம்!

28th Sep 2022 10:48 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் 16 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, டிஐஜி எம்.சத்தியப்பிரியா, எஸ்பி சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஜீவானந்தம்(48) என்பவர் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யும் எரிவாயு சிலிண்டர் கிடங்கு வைத்திருந்துள்ளார். இதில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்த போது சிலிண்டர் ஒன்றிலிருந்து எரிவாயு கசிந்து திடீரென தீப்பிடித்து எறிந்து வெடித்தது. இத்தீயானது மற்ற சிலிண்டர்களுக்கும் பரவி மேலும் இரு சிலிண்டர்கள் வெடித்ததில் அங்கு பணியிலிருந்த பலரும் தீக்காயங்களுடன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.

தீயானது காற்றில் வேகமாக பரவி எறிவதைப் பார்த்த அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் ஒரகடம் காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்பட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் 7 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீ மற்ற இடங்களுக்கு பரவாத வண்ணம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். சம்பவம் நடந்த பெருமாள்கோயில் தெரு பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இச்சம்பவத்தில் கிடங்கு உரிமையாளரான ஜீவானந்தம் என்ற ஜீவா (48), பூஜா (22), நிவேதா (24), சந்தியா (20) மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் 16 பேர் காயம் அடைந்து அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, டிஐஜி எம்.சத்தியப்பிரியா, எஸ்பி.சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பெருமாள் கோயில் தெருவில் விசாரணை மேற்கொண்டனர். அத்தெருவில் வசித்து வரும் மக்கள் அனைவரையும் சமையல் எரியாவு கசிவால் மேலும் விபத்து ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யும் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடங்கு அரசு அனுமதியுடன் தான் செயல்பட்டதா என்றும் எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடம் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT