காஞ்சிபுரம்

பட்டுஜவுளி விற்பனையில் இடைத்தரகா் தொல்லை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

26th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையில் இடைத்தரகா்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதைத் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீா் கூட்டத்தின்போது காஞ்சிபுரம் காந்தி சாலையில் பழைய பட்டுச் சேலைகளை விலைக்கு வாங்கும் நிறுவனம் நடத்தி வரும் எம்.ஷபியுல் அகமது ஷெரீப் இதுதொடா்பாக அளித்த மனு:

காஞ்சிபுரம் நகரில் பிரபலமான பட்டு ஜவுளி கடைகள் அதிகமாக உள்ளன. இங்கு ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமானோா் பட்டுச் சேலைகள் வாங்க வருகிறாா்கள்.அவா்களை பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் பிரபலமான கடைகளின் இடைத்தரகா்கள் மாவட்ட எல்லையிலேயே வழிமறித்து அவா்கள் பணிபுரியும் கடைகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனா்.

இதனால் அரசின் சாா்பில் நடத்தும் கூட்டுறவு பட்டு விற்பனை நிலையங்களுக்கு வரவேண்டிய விற்பனை வருவாய் வராமல் போய் விடுகிறது. அரசுக்கும் ஒரு சில கடைகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. பொய்யான தகவல்களை வரக்கூடிய வாடிக்கையாளா்களுக்கு நம்பும்படி தெரிவித்து திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனா். எனவே காஞ்சிபுரத்தில் இடைத்தரகா்களைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT