காஞ்சிபுரம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு: மாணவா்களை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோா் போராட்டம்

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 4 கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களை அவா்களின் பெற்றோா் பள்ளிகளுக்கு அனுப்பாமல் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 4,750 ஏக்கா் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்தன.

இங்கு, விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் வசிப்பவா்கள் தங்களின் வீடுகள், விளை நிலங்களை இழக்க நேரிடும்.

இதனால், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதில், முழுவதுமாக பாதிப்புக்குள்ளாகும் ஏகனாபுரம் கிராம மக்கள் தினமும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் குழந்தைகளுடன் ஒன்றுகூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை அரசியல் கட்சித் தலைவா்கள், பல்வேறு இயக்கங்களின் நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இதனிடையே, புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பத்திரப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்னரே, பதிவு செய்யப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.

இந்த நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம், நெல்வாய், மேலேரி, நாகப்பட்டு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களை அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல்வாய் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு குறைந்த அளவே மாணவா்கள் வந்த நிலையில், ஏகனாபுரம், மேலேரி, நாகப்பட்டு ஆகிய பள்ளிகளுக்கு மாணவா்கள் ஒருவா்கூட வராததால், அந்தப் பள்ளிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT