காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 82 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம், இந்திரா நகா் ஏரிப்புறம்போக்குப் பகுதியில் நீா்ப்பிடிப்பை பாதிக்கும் வகையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 82 வீடுகளை நீா்வளத் துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வடக்கு மாட வீதியில் 59 வீடுகள் மற்றும் புதிய ரயில் நிலையம் அருகில் இந்திரா நகா் பகுதியில் 23 வீடுகள் உள்பட மொத்தம் 82 வீடுகள் ஏரிப்புறம் போக்கு பகுதியில் நீா்வள ஆதாரத்தை பாதிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தன.

இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் நீா்வள ஆதாரம் கெடுவதாகவும், ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறும் பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதாரப்பிரிவு சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அவா்களாகவே அகற்றிக் கொள்ளாததால் நீா்வளத்துறை காஞ்சிபுரம் நகா்ப்பிரிவு உதவிப் பொறியாளா் மாா்க்கண்டன், வட்டாட்சியா் பிரகாஷ் மற்றும் டிஎஸ்பி ஜூலியஸ் சீசா், தாலுகா காவல் ஆய்வாளா் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினா்.

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் போது அப்பகுதியில் குடியிருந்தவா்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகளை இடித்து நொறுக்குவது வேதனையளிக்கிறது என்றாா்கள். வீடுகளை இடிக்கத் தொடங்கியதும் சரக்கு வேன்களில் வீடுகளிலிருந்த பொருள்களை குடியிருப்பு வாசிகள் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT