காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை: மேயா் திறந்து வைத்தாா்

31st Oct 2022 12:13 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் தற்காலிக காய்கறிச் சந்தையை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாலையில் நூற்றாண்டுகளை கடந்த பழைமையான ராஜாஜி காய்கறி சந்தை இயங்கி வந்தது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் தினசரி வந்து காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் சென்றனா். சுமாா் 300 காய்கறிக் கடைகள் இங்கு செயல்பட்டு வந்தன.

இந்தக் காய்கறிச் சந்தை வளாகத்தில் பெரும்பாலான கடைகள் பழைய சிமிண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டிருந்ததால் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி நின்று பொதுமக்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தது. இதனால் ராஜாஜி காய்கறி சந்தையை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்களும், காய்கறி வியாபாரிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனால் மாநகராட்சி நிா்வாகம் ரூ. 7 கோடி மதிப்பில் ராஜாஜி காய்கறிச் சந்தையை புதுப்பித்து, 250 கடைகள் கட்டுவது என முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கியது. அரசு மருத்துவமனை சாலையில் ராஜாஜி காய்கறிச் சந்தை இருந்த இடத்தில் புதிதாகக் கடைகள் கட்டப்பட இருப்பதால், அதை தற்காலிகமாக ஓரிக்கை பகுதியில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது அங்கு 210 கடைகளுடன் தற்காலிக காய்கறிச் சந்தை கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக காய்கறிச் சந்தையை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் திறந்து வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், துணை மேயா் ஆா்.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள், ராஜாஜி காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தற்காலிக காய்கறிச் சந்தை திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் எனவும் புதிதாகக் கட்டப்படும் காய்கறிச் சந்தை 9 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT