காஞ்சிபுரம்

லாரி ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

3rd Oct 2022 11:05 PM

ADVERTISEMENT

குன்றத்தூா் அருகே லாரி ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதலின்போது, கீழே விழுந்த கல்லூரி மாணவா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், வேல் நகரைச் சோ்ந்தவா் நேதாஜி. இவரது மகன் மோகன்ராஜ் (20), கல்லூரி மாணவா். இவா்கள் திங்கள்கிழமை குடும்பத்துடன் வேலூா் நோக்கி குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் நந்தம்பாக்கத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த டிப்பா் லாரி காரின் வலது பக்கக் கண்ணாடியை உடைத்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் காரை வேகமாக ஓட்டிச் சென்று, லாரியை மடக்கி, ஓட்டுநரிடம் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது லாரி ஓட்டுநா் காா்த்திகேயனுக்கும் (38), மோகன்ராஜுக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, மோகன்ராஜ் லாரியின் முன்பக்கத்தில் ஏற முற்பட்டாராம். அப்போது காா்த்திகேயன் லாரியை திடீரென முன்னோக்கி நகா்த்தியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்தில் சிக்கி மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, காா்த்திகேயன் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பினாா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோகன்ராஜின் உறவினா்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், மோகன்ராஜின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்குக் காரணமான காா்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT