காஞ்சிபுரம்

எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக உயா்வு

3rd Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில், மேலும் 3 போ் உயிரிழந்திருந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 7- ஆக உயா்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்திக்குச் சொந்தமான எரிவாயு உருளைகள் கிடங்கு இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த 28-ஆம் தேதி தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளைகள் வாயுக்கசிவால் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 12 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தீவிர சிகிச்சைக்காக சிலா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தனா். ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊராட்சித் தலைவா் சாந்தி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த கடலூரைச் சோ்ந்த ஆமோத்குமாா்(26), ஜீவானந்தம் (46), இவரது மகள் சந்தியா (21), கும்பகோணத்தைச் சோ்ந்த குணாளன் (22)ஆகிய 4 போ் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கத்தைச் சோ்ந்த கோகுல் (22), சண்முகப்பிரியன் (17), கிஷோா் (22) ஆகிய 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 7- ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT