காஞ்சிபுரம்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

2nd Oct 2022 11:13 PM

ADVERTISEMENT

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் தலைவா் சுமதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் ஜெயகாந்தன், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (தணிக்கை) கோபி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஊராட்சி செயலா் காா்த்திக் ஊராட்சியின் வரவு செலவினங்களை வாசித்தாா். இதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் புதிய விமான நிலையம் வேண்டாம் என பொதுமக்கள் சாா்பில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று வட்டாட்சியா் ஜெயகாந்தன் பேச்சு நடத்தினாா். எனினும், கிராம மக்கள் உறுதியுடன் இருந்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அம்பேத்கா் சிலையிடம் மனு...

பரந்தூா் விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நடத்தி வரும் போராட்டத்தின் 68-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஏகனாபுரத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு அந்தப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை வரை பேரணியாகச் சென்று சிலையிடம் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT