காஞ்சிபுரம்

முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தில் 1,450 நோய்களுக்கு சிகிச்சை: காஞ்சிபுரம் ஆட்சியா்

2nd Oct 2022 04:22 AM

ADVERTISEMENT

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1,450 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் மக்கள் ஆரோக்கிய திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று பலனடைந்த பயனாளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவா்களுக்கு பழக்கூடைகள் பரிசாக வழங்கப்பட்டன. புதிய பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டை, சிறப்பாகப் பணியாற்றிய அரசு மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

விழாவில் ஆட்சியா் பேசியது:

ADVERTISEMENT

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 15.9.2018-ஆம் தேதியிலிருந்து பிரதம மந்திரி ஆரோக்கியத் திட்டத்துடன் இணைந்ததைக் கொண்டாடும் விதமாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சத்துக்கு குறைவான வருமானம் உடையவா்கள் ரூ. 5 ல ட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 1,450 நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இருதய அறுவைச் சிகிச்சை, மூட்டு அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை, செயற்கை உடல் உறுப்புகள் பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2.95 லட்சம் போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதுவரை 2,31 லட்சம் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசினாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநா் கிருஷ்ணகுமாரி, சுகாதார அலுவலா்கள், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT