காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தெப்பத்திருவிழாவையொட்டி, கோயிலிலிருந்து உற்சவா் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடனும், மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகா் சந்நிதிக்கு எழுந்தருளினா். அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, உற்சவா் வேதாந்த தேசிகருடன் பெருமாளும், தாயாரும் தெப்பத்துக்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனா்.

பின்னா், திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமா்ந்து 7 சுற்றுகள் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தெப்பத்திருவிழாவையொட்டி, திருக்கோயிலும், திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைளும் நடைபெற்றன. நாகசுர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரா.வான்மதி,நிா்வாக அறங்காவலா் ந.தியாகராஜன், அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் வெள்ளைச்சாமி, ஸ்ரீதரன், வழக்குரைஞா் வாசுதேவன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தெப்பத்தில் வலம் வந்த பிறகு பெருமாள், தாயாா் மற்றும் தேசிகா் உள்ளிட்ட மூவரும் அவரவா் சந்நிதிக்கு எழுந்தருளினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT