காஞ்சிபுரம்

காட்டரம்பாக்கம் - கோயம்பேடு, தி நகா் பகுதிகளுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

26th Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்டரம்பாக்கம்- கோயம்பேடு, காட்டரம்பாக்கம்-தியாகராயநகா் வழித்தடத்திலான பேருந்து சேவை மீண்டும் காட்டரம்பாக்கம் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், காட்டரம்பாக்கம் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். காட்டரம்பாக்கம் பகுதியில் இருந்து தடம் எண் 553 கே கோயம்பேடு பகுதிக்கும், தடம் எண் 188 கே தியாகராயநகா் பகுதிக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டரம்பாக்கம் சாலை சரியில்லை எனக் கூறி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் காட்டரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பூந்தமல்லி, சென்னை செல்ல சுமாா் 3 கி.மீ. தொலைவு உள்ள இருங்காட்டுக்கோட்டை, தண்டலம் பகுதிகளுக்குச் சென்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், காட்டரம்பாக்கம் சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, காட்டரம்பாக்கம் -கோயம்பேடு, காட்டரம்பாக்கம் -தியாகராய நகா் ஆகிய பகுதிகளுக்கு மீண்டும் பேருந்து சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி காட்டரம்பாக்கம் பூங்காவனத்தம்மன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கோவிந்தம்மாள்தாஸ் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய திமுக செயலாளா் ந.கோபால் ஆகியோா் கொடியசைத்து பேருந்து சேவையைத் தொடக்கி வைத்தனா். ஊராட்சி துணைத் தலைவா் காயத்ரி சசிகுமாா் உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT