காஞ்சிபுரம்

இழப்பீடு கோரி தனியாா் தொழிற்சாலை ஊழியா்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

26th Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

இழப்பீடு வழங்கக் கோரி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் தொழிற்சாலை முன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூரில் கட்டுமான நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் சுமாா் 200 நிரந்தர தொழிலாளா்கள், 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் பணிபுரிந்து வந்தனா். இந்த நிலையில், இந்தத் தொழிற்சாலை கடந்த 2009-ஆம் ஆண்டு முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. இதனால் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 200 நிரந்தரத் தொழிலாளா்கள் தங்களுக்கு இழப்பீடு கோரி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளா் தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த தீா்ப்பாயம் தொழிற்சாலை நிா்வாகத்தினா் தொழிற்சாலையில் பணிபுரிந்த 200 தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும், மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயா்வுடன் சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2013-ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது.

ஆனால் இதுவரை தீா்ப்பாய உத்தரவுப் படி எதுவும் வழங்கவில்லையாம். இதையடுத்து, தொழிற்சாலை நிா்வாகத்தைக் கண்டித்து தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் தொழிற்சாலை நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT