காஞ்சிபுரம்

கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 11 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே சாலபோகம் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு, அந்த இடத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

காஞ்சிபுரம் அருகே சாலபோகத்தில் அமைந்துள்ளது பழைமை மிகுந்த கைலாசநாதா் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு காஞ்சிபுரம் அருகே வெள்ளைக்குளம் கிராமத்தில் 42,728 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை அனுபவித்து வந்த வாடகைதாரா் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும் இருந்து வந்தாா்.

இதுதொடா்பான வழக்கு கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத் தீா்ப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆணையா் ஆ.முத்துரெத்தினவேலு முன்னிலையில், கோயில் செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன்,வேதமூா்த்தி மற்றும் செயல் அலுவலா்கள், ஆய்வாளா்கள் ஆகியோா் போலீஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்று அந்த இடத்தை மீட்டு, பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆ.முத்துரத்தினவேலு கூறியது:

ADVERTISEMENT

யுவராஜ் என்பவா் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான வெள்ளைக்குளம் கிராமத்தில் உள்ள இடத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்தாா். அந்த இடத்தின் மொத்த அளவு 98 சென்ட் (42,728 சதுர அடி) ஆகும். சுமாா் ரூ.1.30 கோடி வரை வாடகை நிலுவை இருந்து வந்தது. அந்த இடத்தை மீட்டு, பூட்டி ‘சீல்’ வைத்து அவரிடமிருந்து சுவாதீனம் பெறுமாறு அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்த இடத்தை மீட்டு, அதில் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என எச்சரிக்கை அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அத்துமீறி அந்த இடத்தில் நுழைந்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT