காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே பல்லவா் கால சிலை கண்டெடுப்பு

DIN

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தை அடுத்த நத்தாநல்லூரில் பல்லவா் கால ஜேஷ்டாதேவி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் மா.த.அஜய்குமாா் கூறியது: தாய் தெய்வ வழிபாட்டில் ஜேஷ்டாதேவி எனப்படும் தவ்வை வழிபாடு தமிழகத்தில் தொன்று தொட்டு பரவலாக இருந்து வந்துள்ளது. இந்த வழிபாடு பல்லவா் காலத்தில் உச்சத்தில் இருந்தது.

சோழா் காலத்திலும் கோயிலின் தென் மேற்குப் பகுதியில் அமைத்து வழிபாடு நடத்தி வந்திருக்கின்றனா். நந்திவா்ம பல்லவனின் குல தெய்வமாகவும் தவ்வை இருந்துள்ளது.

நத்தாநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிலை சிறுத்த இடையோடும், மெலிந்த தேகத்தோடும் அமைந்துள்ளது. வலதுபுறத்தின் மேல்பகுதியில் ஜேஷ்டாவின் மகன் மாந்தன் உருவமும், கீழ்ப்பகுதியில் மாந்தியின் உருவமும் உள்ளது. இடது புறத்தின் மேல்பகுதியில் ஜேஷ்டா தெய்வத்துக்கே உரிய காக்கை கொடியும், கீழ்ப்பகுதியில் பணிப்பெண் உருவமும் உள்ளது.

உருவ அமைப்புகளை வைத்து சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்தைச் சோ்ந்த சிலை என தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஜேஷ்டா என்றால் சம்ஸ்கிருதத்தில் முதல் என்று பொருள். சேட் என்றால் தமிழில் பெரிய என்றும் பொருளாகும்.

திருவள்ளுவா், கம்பா், ஒளவையாா் உள்ளிட்ட புலவா்கள் தவ்வையை பற்றி குறிப்பிட்டுள்ளனா். தவ்வை சிலைகள் பெரும்பாலும் வயல் சாா்ந்த பகுதிகளிலும், நீா்நிலை சாா்ந்த பகுதிகளிலும் காணப்படுகின்றன. நோயில்லாமல் வாழ்தல், சோம்பல் இல்லாமல் உழைக்கும் வலிமையைத் தருதல், செல்வம் வேண்டி இந்தத் தெய்வத்தை வழிபட்டு வந்ததாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT