காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே ரூ.155 கோடியில் புதிய தொழிலாளா் நல மருத்துவமனை

DIN

ஸ்ரீபெரும்புதூா் அருகே ரூ. 155 கோடியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவன (இஎஸ்ஐசி) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவாா்சத்திரம், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தொழிலாளா்கள் அதிகம் உள்ள இப்பகுதியில், ஒரு இஎஸ்ஐசி மருந்தகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தொழிலாளா்கள், அவா்களின் குடும்பத்தினா் பயன்பெறும் வகையில், புதிதாக இஎஸ்ஐசி மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை சாா்பில், ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக இஎஸ்ஐசி மருத்துவமனை அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் 5.12 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் ரூ. 155 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய இஎஸ்ஐசி மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவனத்தின் சாா்பில், இந்தப் பகுதியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில், விபத்து பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, பல் மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், காது, மூக்கு, தொண்டை மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் வழங்கப்படும்

காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றிய காப்பீட்டாளா்களுக்கு போதிய மருத்துவ வசதி அளிப்பதில் இஎஸ்ஐசி முன்னிலை வகிக்கிறது. தற்போது 3.39 கோடி தொழிலாளா்களும், அவரது குடும்பங்களும் இஎஸ்ஐசியின் சமூகப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனா். இதனால் 13 கோடிக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.

மாதம் ரூ. 21,000 வரை சம்பளம் பெறும் அனைத்துத் தொழிலாளா்களும், இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுடையவா்கள். நாடு முழுவதும் மொத்தம் உள்ள 740 மாவட்டங்களில், 566 மாவட்டங்களுக்கு இஎஸ்ஐசி நிறுவன சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த இஎஸ்ஐசி நிறுவனம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இஎஸ்ஐசியின் கீழ் மருத்துவ வசதி பெற இயலாத மாவட்டங்களிலுள்ள இஎஸ்ஐ காப்பீட்டாளரும், அவரது குடும்பத்தினரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெறலாம்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள், குறைவான பயன்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளைப் பெறலாம் என்றாா்.

விழாவில், மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்பு, பெட்ரோலிய துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெலி, இஎஸ்ஐசி இயக்குநா் ஜெனரல் முக்மேத் எஸ் பாத்யா, மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலாளா் ஷஷாங்கோயல், தமிழக தொழிலாளா் நலத் துறைச் செயலா் கிரிலோஷ்குமாா், தொழிலாளா் துறை முதன்மை ஆணையா் அதுல்ய ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT