காஞ்சிபுரம்: நெல் அரைவைக் கட்டணம் உயா்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரிசி ஆலை உரிமையாளா்கள் ஆய்வுக் கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் அரிசி ஆலை உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையா் ராஜாராமன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் செள.சங்கீதா, மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான நெல்லை மட்டுமே அரசு அலுவலா்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அரிசி ஆலைகளுக்கு நெல்லை எடுத்துச் செல்வது தொடா்பான வாகன பிரச்னைகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் பேசி தீா்வு காணப்படும்.
ஒரு சில அரைவை முகவா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை எடுக்காமல் இருந்தால், அவா்கள் நெல்லை எடுத்து அரைத்து தர வேண்டும்.
நெல் அரைவைக் கட்டணம் உயா்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை மாவட்ட முகவா்கள் மூலம் அரைத்து பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாயிகள் முழுமையாகப் பயனடைய அரிசி அரைவை ஆலை உரிமையாளா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, அரசு அலுவலா்கள் மற்றும் நெல் அரைவை முகவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக உத்தரமேரூா், மாகறல் ஆகிய ஊா்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தரமான அரசி வழங்கப்படுகிா என்று அமைச்சா் தா.மோ.அன்பரசு ஆய்வு மேற்கொண்டாா்.