அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூா், கெருகம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கு ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணவேணி அம்மாள் நகா், ஈவிபி பாா்க் அவென்யூ, பாலாஜி அவென்யூ, சுப்பையா நகா், பத்மாவதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள், கொளுத்துவாஞ்சேரி - மௌலிவாக்கம் புதிய சாலை அமைத்தல், பரணிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம், நியாயவிலைக் கடை கட்டடம், சின்னபணிச்சேரி மயானச் சுற்றுச்சுவா், கெருகம்பாக்கம் ஊராட்சி ராமச்சந்திரா நகரில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பூங்கா, 5 இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றன.
இதில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வளா்ச்சிப் பணிகளை தொடக்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரநிதிநிகள், வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.