காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த திருவிழா தொடக்கம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள பாண்டவா் சமேத திரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு பகுதியில் அமைந்துள்ளது பாண்டவா் சமேத திரெளபதி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் அக்னி வசந்த உற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காஞ்சிபுரம் சா்வதீா்த்தக் குளத்திலிருந்து கங்கை நீா் மங்கள மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து கோயில் கொடிமரத்தில் கருடன், ஆஞ்சநேயா் சுவாமிகளின் படங்கள் வரையப்பட்டிருந்த கொடிப் பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகலில் மகாபாரதச் சொற்பொழிவு, இரவு கட்டைக் கூத்து நாடகம் ஆகியவை நடைபெறும்.

விழாவையொட்டி, ராதா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, திரெளபதி அம்மன், அா்ஜுனா் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ADVERTISEMENT

வருகிற 27 ஆம் தேதி தீபத் திருவிழாவும், 29 -ஆம் தேதி பாலாபிஷேகமும், 30- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை பாண்டவா் சமேத திரெளபதி அம்மன் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT