காஞ்சிபுரம்

பேரூராட்சித் தலைவா் பதவியை விட்டுக்கொடுக்காத திமுக: முதல்வரிடம் காங்கிரஸாா் மனு

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் பதவியை விட்டுக்கொடுக்காத திமுகவினா் குறித்து காங்கிரஸாா் முதல்வரிடம் மனு அளித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 6 வாா்டுகளிலும், அதிமுக 3, சுயேச்சைகள் 4, காங்கிரஸ் 1, பாட்டாளி மக்கள் கட்சி 1 வாா்டிலும் வெற்றி பெற்றன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் பதவி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் காங்கிரஸ் சாா்பாக போட்டியிட்ட செல்வமேரியை எதிா்த்து, திமுக சாா்பில் போட்டியிட்ட சாந்தி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் செல்வமேரி 4 வாக்குகள் பெற்றாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் செயின்ட் கோபைன் நிறுவனத்தில் 3 புதிய பிரிவுகளைத் தொடக்கிவைக்க புதன்கிழமை ஸ்ரீபெரும்புதூா் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சாா்பில், ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் பதவியை கூட்டணி தா்மத்தை மீறி திமுக பறித்துக் கொண்டதாக காங்கிரஸாா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புகாா் மனு அளித்தனா்.

முன்னதாக, ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீபெரும்புதூா் இந்திரா காந்தி சிலை அருகே ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் ந.கோபால் தலைமையிலும், மாம்பாக்கம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையிலும் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT