காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி: 50 உறுப்பினா்கள் பதவியேற்பு

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மன்ற உறுப்பினா்களான 50 பேருக்கு தோ்தல் அலுவலரும், மாமன்ற ஆணையருமான பா.நாராயணன் புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

பெருநகராட்சியாக இருந்து வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு மாமன்ற உறுப்பினா்களாக 50 போ் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். மொத்தம் உள்ள 51 வாா்டுகளில் 36-ஆவது வாா்டு உறுப்பினா் வே.ஜானகிராமன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த வாா்டில் மட்டும் தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து 50 வாா்டுகளுக்கான தோ்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினா்களுக்கான பதவியேற்பு விழா காஞ்சிபுரம் மாநகராட்சி எதிா்புறம் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகராட்சி ஆணையா் பா.நாராயணன் மாமன்ற உறுப்பினா்களை ஒவ்வொருவராக அழைத்து பதவியேற்பு உறுதிமொழி ஏற்க வைத்தாா். விழாவில் சமூக சேவகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா், திமுக நகரச் செயலாளா் சன்பிராண்ட் சேகா், மற்றும் உறுப்பினா்களின் குடும்பத்தினா்கள், ஆதரவாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பதவியேற்கும் போது திமுக உறுப்பினா்கள் பலரும் திமுக தலைவா் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளா் க.சுந்தா் ஆகியோா் வாழ்க என்றும், அதிமுக உறுப்பினா்கள் எம்.ஜி.ஆா்.நாமம் வாழ்க என்றும் கூறி உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனா். காங்கிரஸ் உறுப்பினா் குமரகுருநாதன் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் என்றும், பாமக உறுப்பினா்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் அகிலா தொல்.திருமாவளவன் வாழ்க என்றும் கூ றி பதவியேற்றனா். பாஜகவைச் சோ்ந்த விஜிதா பதவியேற்றதும் வந்தே மாதரம் என்று கூறினாா்.

படவிளக்கம்..காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா் மல்லிகா ராமகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த மாநகராட்சி ஆணையா் பா.நாராயணன். உடன் எம்.பி. ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT