காஞ்சிபுரம்

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்: விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்

25th Jun 2022 04:52 PM

ADVERTISEMENT

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய செயல் தலைவர் அலோக்குமார் தெரிவித்துள்ளார். 

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய அளவிலான நிர்வாகக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி திங்கள்கிழமை வரை 5 நாட்களுக்கு நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் நேபாளம், தாய்லாந்து, இலங்கை மற்றும் ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், அசாம் உட்பட பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்தும் அமைப்பின் நிர்வாகிகள் 422 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பின் அகில இந்திய செயல் தலைவர் அலோக்குமார் கூறியது, தெலங்கானா, ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே கண்டிவாக்கம் ஆகிய இடங்களில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.  காஞ்சிபுரத்தில் சுவாமி சிலைகள் இடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஒரு நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் குடிபோதையில் செய்திருக்கிறார் என்றும் காவல்துறை சொல்வதை நம்ப முடியவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட உண்மையான நபரை கைது செய்ய வேண்டும். மேலும் மற்ற இடங்களில் சிலைகளை உடைத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத இருக்கிறோம். அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில்களை விடுவித்து அவற்றை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக கோயில்களிலிருந்து வரும் வருமானத்தை அரசு தனது நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

ADVERTISEMENT

இதையும் படிக்க- ‘மத வெறுப்புப் பிரசாரங்களைத் தடுத்து நிறுத்துங்கள்’: கர்நாடக முதல்வருக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்

இந்துக் கோயில்களை ஒரு சில மாநில அரசுகள் தொடர்ந்து நிர்வகித்து வருவது வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தின் தொடர்ச்சியாகவே அமைப்பு கருதுகிறது. இந்துக் கோயில்களிலிருந்து வரக்கூடிய வருமானம் கோயில்களின் பராமரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அலோக்குமார் தெரிவித்தார். பேட்டியின் போது அமைப்பின் தேசிய ஊடக தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி,வடதமிழக தலைவர் சு.சீனிவாசன், வட தமிழக ஊடகப்பிரிவு தலைவர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT