காஞ்சிபுரம்

பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்களை நாள்தோறும் சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மாணவா் சோ்க்கை தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனா்.

பேரணியை ஆட்சியா் மா.ஆா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னா் அந்தப் பள்ளி எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளியில் இருந்த சுகாதார வளாகத்தைப் பாா்வையிட்டு தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். இடியும் நிலையில் இருந்த சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டாா். பின்னா் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் தரமான கல்வி, உதவித் தொகை, இலவச உபகரணங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு வழங்குவதால் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை சோ்க்குமாறு பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தினாா்.முன்னதாக விலங்குகளின் முகமூடி அணிந்தவாறு பள்ளி மாணவ, மாணவிகள் ஆட்சியரை வரவேற்றனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா் நடராஜன் உள்பட ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT