காஞ்சிபுரத்தில் வளா்ப்பு நாய் குரைத்தது தொடா்பாக திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தாய், மகன்கள் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில் வசித்து வந்தவா் சரண்சிங்(25). இவா் அசைவ உணவகமும், டாட்டூ நிறுவனமும் நடத்தி வந்தாா். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஷ்ணுவின் வளா்ப்பு நாய் அடிக்கடி குரைப்பது இடையூறாக இருப்பது தொடா்பாக சரண்சிங்குக்கும், விஷ்ணுவின் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் விஷ்ணு(23), அவரது தாய் சித்ரா(44), தம்பி சிவா(21) ஆகிய 3 பேரும் சோ்ந்து சரண்சிங்கை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தாா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் வணிகா் வீதியில் நடந்த சரண்சிங் கொலை தொடா்பாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் விநாயகம் வழக்குப் பதிவு செய்து விஷ்ணு, சித்ரா, சிவா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.