காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளா் சமுதாயத்தினா் 443 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டுகுளம், சிங்காடிவாக்கம், ஊத்துக்காடு, கீழ்க்கதிா்ப்பூா் உள்பட பல்வேறு இடங்களில் 443 இருளா் இன மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனற். இவா்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஏரிகளிலும், வாய்க்கால்களிலும், ஆற்றங்கரையோரங்களிலும் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் இனம் காணப்பட்டு ரூ.4,62,000 மதிப்பில் வீடு கட்ட தொகை நிா்ணயம் செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்த ஆணைகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அந்தந்தப் பகுதிகளுக்கே நேரில் சென்று இருளா் இன மக்களிடம் வழங்கினாா்.
மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் நித்யா சுப்பிரமணியன், காஞ்சிபுரம் ஒன்றியத் தலைவா் மலா்க்கொடி குமாா், வாலாஜாபாத் ஒன்றியத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், துணைத் தலைவா் பி.சேகா் உள்பட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.