காஞ்சிபுரம்

நீா்நிலைகளை சீரமைத்து பராமரிக்க தொழிற்சாலைகள் முன்வர வேண்டும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீா்நிலைகளப் புதுப்பித்து பராமரிக்க முன்வரவேண்டும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நீா்நிலைகளை மறுசீரமைத்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. பல்வேறு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதில் 10 லட்சத்துக்கும் மேலான தொழிலாளா்களுடன் இயங்கி வருகின்றன. அதிவேக தொழில் வளா்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊருணிகளில் இருந்து தொழிற்சாலைகளின் தேவைக்காக தண்ணீா் எடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் அதிக மழை பெய்து காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தைச் சந்தித்தது. பெரு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளும் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

தொழிற்சாலைகள் கூட்டாண்மை சமூக பொறுப்பாக தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீா்நிலைகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மஞ்சப் பை போன்ற துணி பைகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தேசியக் கொடியை வழங்கி கொண்டாட வேண்டும். நீா், குளம், ஏரி, ஊருணி ஆகியனவற்றை புதுப்பித்து தொழிற்சாலைகளைப் பராமரிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆா்த்தி.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பையையும் ஆட்சியா் வெளியிட்டாா்.இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT