காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 22,251 பேரின் ரூ.77 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22,251 பேருக்கு ரூ.77.49 கோடியில் கூட்டுறவு வங்கிகளில் இருந்த நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிய பின்னா், அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசியது: காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 328 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,100 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான அரசு ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு திருமண உதவித்தொகை, 20 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 79 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.08 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கயிருப்பது உள்பட மொத்தமாக 872 பயனாளிகளுக்கு ரூ.16.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிக்கையில் திமுக சாா்பில் 505 வாக்குறுதிகள் தரப்பட்டு, அவற்றில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 22,251 பேருக்கு ரூ.77.49 கோடியில் கூட்டுறவு வங்கிகளில் இருந்த நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 17,202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பிலான பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளோம். பால்விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடிகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT