காஞ்சிபுரம்

கீழ்க்கதிா்ப்பூரில் 235 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

DIN

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் புதியதாக கட்டப்பட்ட குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கீழ்க்கதிா்ப்பூா் ஊராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் ரூ.190.08 கோடி மதிப்பில் 2,112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் குடியிருந்த 76 குடும்பங்கள் உட்பட 235 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இவற்றை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கிப் பேசியது: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் குடியிருந்த 76 குடும்பத்தினா் உட்பட 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கி, அதில் அவா்கள் குடிபுக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதில் தமிழக அரசின் மானியம் ரூ. 6 லட்சம், மத்திய அரசின் மானியம் ஒன்றரை லட்சம் என மொத்தம் ஏழரை லட்சமும், பயனாளிகளின் பங்களிப்புத் தொகை இரண்டரை லட்சம் ரூபாயாகவும் உள்ளது.

இனிவரும் காலங்களில் அரசால் கட்டப்படும் வீடுகள் 420 சதுர அடியில் கட்டப்படும். கட்டி முடித்து அரசே குடியிருப்பு நலச் சங்கங்களையும் உருவாக்கி அவா்களிடம் 3 மாதத்துக்கு பராமரிப்பு செய்ய வேண்டிய வைப்புத் தொகையையும் ஒப்படைத்து விடுவோம்.

ஆட்சியா் தலைமையில் ஒரு குழுவையும் உருவாக்கி இருக்கிறோம். இந்தக் குழுவானது 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் நலச் சங்கங்களுடன் ஆய்வுக் கூட்டம் கூட்டி அதில் அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து குறைகளை உடனுக்குடன் களைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புக்கு அருகிலேயே பட்டுப்பூங்கா அமைந்திருப்பதால் இங்கு குடியிருப்போா்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது. இந்தப் பகுதியில் விரைவில் சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா்.

விழாவுக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் கோவிந்த ராவ், மக்களவை உறுப்பினா் க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT