காஞ்சிபுரம்

முழு ஊரடங்கு விதிகளை மீறி வீதிகளில் திரிந்த மக்கள்

24th Jan 2022 07:41 AM

ADVERTISEMENT

மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின்போது அரசின் விதிகளை மீறி பொதுமக்கள் பலா் வீதிகளில் சுற்றித் திரிந்ததை அதிகமாகக் காணமுடிந்தது.

தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியன திறந்திருந்தன. சிறிய உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தாலும் பெரிய உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டு அங்கு பாா்சல் உணவு வழங்கும் சேவை நடந்தது.

காஞ்சிபுரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமையில் 1,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

மாா்கழி மாதம் முடிந்து தை மாத முதல் திருமண முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணத்துக்கு செல்கிறோம் என கூறிக்கொண்டு பொதுமக்கள் பலரும் நகரின் பிரதான சாலைகளில் அதிகமாக செல்வதை காண முடிந்தது.

கடந்த இரு வாரங்களை விட இந்த வாரம் காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பலரும் திருமண அழைப்பிதழ்களை காவல்துறையினரிடம் காட்டி விட்டு சென்றனா். காஞ்சிபுரத்தில் தேரடி, காந்தி சாலை, பூக்கடைசத்திரம், காந்தி சாலை, ரங்கசாமி குளம், காமராஜா் சாலை, நெல்லுக்காரத் தெரு, வணிகா் தெரு ஆகிய நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டாலும் பொதுமக்கள் சிலரின் நடமாட்டமும் இருந்தது.

காவல் துறையினரும் தேவையில்லாமல் சுற்றித் திரிபவா்களை கண்டறிந்து அவா்களிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலித்தனா்.திருமணத்துக்கு சென்று விட்டு வருவதாகக் கூறியும் தங்களிடம் காவல்துறையினா் அபராதம் வசூலிப்பதாகவும் சிலா் குற்றம் சாட்டினா். வாடகை ஆட்டோக்கள், இயங்க இந்த ஊரடங்கின் போது அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதிகம் இயக்கப்படவில்லை.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT