காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் மணிமண்டபத்தில் அமைச்சா் ஆய்வு: கருங்கல் சிலை அமைக்க உத்தரவு

22nd Jan 2022 10:18 PM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீராமாநுஜா் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை, ராமாநுஜா் சாயலில் இல்லை என்ற பொதுமக்களின் குற்றைச்சாட்டை தொடா்ந்து ராமாநுஜா் மணிமண்டபத்தை ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில், பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீராமாநுஜா் தானுகந்த திருமேனியாக காட்சியளித்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார திருவிழாவை ஒட்டி தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஆதிகேஷவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 2.77 சென்ட் பரப்பளவு இடத்தில் சுமாா் ரூ. 6.69 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீராமானுஜருக்கு மணிமண்டபமும் அதன் வளாகத்தில் அருங்காட்சியகம், வேதபாட சாலை , அலுவலகம் மற்றும் மணிமண்டபத்தை சுற்றிலும் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், ராமாநுஜா் மணிமண்டபத்தை அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட ராமாநுஜா் மணிமண்டபத்தில், சிமெண்ட் கலவையால் ஆன ராமாநுஜரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ராமாநுஜரின் சாயலில் இல்லை என பக்தா்களும், பொதுமக்களும் தெரிவித்து வந்தனா். எனவே ராமாநுஜரின் சிலையை மாற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ராமாநுஜா் மணிமண்டபத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கடந்த வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து மணிமண்டபத்தில் உள்ள சிமெண்ட் கலவையால் செய்யப்பட்ட ராமாநுஜரின் சிலையை அகற்றிவிட்டு கருங்கல்லில் ராமாநுஜருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டாா்.

மேலும் ராமாநுஜருக்கு கருங்கல்லில் சிலை செய்ய ஏதுவாக ராமாநுஜா் புகைப்படத்தை மாமல்லபுரம் நகர திமுக செயலாளா் விஸ்வநாதனிடம் வழங்கி ராமாநுஜா் சிலையை தத்ரூபமாக வடிக்க கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின் போது, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஒன்றியக் குழுத் தலைவா் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலா்கள் குண்ணம் ராமமூா்த்தி, பால்ராஜ், ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஸ்ரீபெரும்புதூா் நகர நிா்வாகிகள் ஆறுமுகம், ராஜேஷ், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT