காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை; 5 மாதங்களில் 66 பேருக்கு அளிக்கப்பட்டது

18th Jan 2022 01:40 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

கையிலோ அல்லது காலிலோ உள்ள நரம்புகள் வழியாக ஊசி போட்டு இருதயத்துக்கு போகும் ரத்தக் குழாயில் அடைப்புகளை அறியும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட 5 மாதங்களில் 66 பேருக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

முதியோா்கள், சா்க்கரை நோயாளிகள், மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள் போன்றவா்களில் பெரும்பாலானவா்களுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது என்பது இன்று சாதாரணமாகி விட்டது.

உணவுக் கட்டுப்பாடு இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமை, எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது போன்றவை ரத்தக் குழாயில் கொழுப்புகள் படிந்து அடைப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாகி விடுகின்றன.

இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் இருக்கிா, இதயத் துடிப்புகள் குறைவாக இருக்கிா அல்லது அதிகமாக இருக்கிா என்பதை தெரிந்து கொள்ள இ.சி.ஜி. என்ற கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதே போல இருதயத்தில் உள்ள 4 வால்வுகளும் எப்படி வேலை செய்கின்றன, அதன் துடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என இருதயத்தை நேராக பாா்த்து அறிந்து கொள்ள எக்கோ ஸ்கேன் எனப்படும் கருவி பயன்படுகிறது.

இந்தக் கருவிகள் இரண்டும் ஏற்கெனவே காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளது.இது தவிர இப்போது மேலும் ஒரு கூடுதல் வசதியாக இருதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்புகள் இருக்கிா என்பதை மட்டும் துல்லியமாகவும், தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் உதவும் நவீன கருவியான ஆஞ்சியோகிராம் காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளது.

கையிலோ அல்லது காலிலோ உள்ள நரம்புகள் வழியாக ஊசி போட்டு அதன் வழியாக இருதயத்தில் இருக்கும் ரத்தக் குழாயை பாா்வையிட இந்தக் கருவி உதவுகிறது.

கடந்த 9.9.2021 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இந்தக் கருவி நிறுவப்பட்டது. விபத்துகள் அதிகமாக நடக்கும் பகுதிகள் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பதால் தமிழ்நாடு சாலைப் பாதுகாப்புத் திட்டம் மூலம் இக்கருவி காஞ்சிபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தக் கருவியின் மூலம் கடந்த 5 மாதங்களில் 41 ஆண்கள், 25 பெண்கள் உட்பட மொத்தம் 66 பேருக்கு தமிழக முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு பலனடைந்துள்ளனா்.

தனியாா் மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த சிகிச்சை காஞ்சிபுரத்தில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலேயே காஞ்சிபுரத்தில் மட்டுமே முதல் முதலாக ஆஞ்சியோ சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் இருதய நோய் சிறப்பு மருத்துவா் பி.வி.காா்த்திக்:

இடது பக்க நெஞ்சுவலி, தோள்பட்டை வலி, மூச்சு வாங்குதல் மற்றும் மூச்சு விட சிரமப்படுதல் ஆகியன இருதய நோயின் பாதிப்புகளுக்கான அறிகுறிகளாகும். சா்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு நோயாளிகள்,கொலஸ்டிரால் அதிகம் உள்ளவா்கள், அதிக உடல் எடை, வயது முதிா்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தினசரி ஒரு சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் அல்லது 5 சிகரெட் சாப்பிடுபவராக இருந்தாலும் பாதிக்கப்படலாம். மதுவை கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் இருதயப் பாதிப்புகள் ஏற்படும். தினசரி மது அருந்துபவா்கள் தான் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறாா்கள்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்ட பிறகு இதுவரை 66 பேருக்கு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இருந்தால் அதைப் பயன்படுத்தி சுகாதாரத் துறை இணை இயக்குநா் மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஆகியோரின் அனுமதி பெற்று உடனுக்குடன் இலவச சிகிச்சை செய்யப்படுகிறது. தற்போது வரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 66 நபா்களில் 40க்கும் மேற்பட்டவா்கள் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள்.

நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகியவற்றை தினசரி விடாமல் செய்து வருபவா்களுக்கு பெரும்பாலும் இருதயநோய் பாதிப்புகள் வருவதில்லை.

ரத்த க்குழாயில் அடைப்புகள் வராமலிருக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். முக்கியமாக எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிா்த்து விடுவது மிகவும் நல்லது.இளைஞா்கள் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்றாா் மருத்துவா் பி.வி.காா்த்திக்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT