காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு சேலைக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அதில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ரூ. 1.76 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனா்.
தைப்பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், பட்டுக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு சேலைக் கடைகளில் மாநகராட்சி ஆணையா் ப.நாரயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் சோதனை நடத்தினா். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கிறாா்களா, கடைகளின் உரிமையாளா்கள், ஊழியா்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறாா்களா எனவும் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில் பல கடைகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தி அபராதம் வசூலித்துள்ளனா்.
இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் கூறியது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கினால் தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். வணிக நிறுவனங்களுக்கு கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறும் விளக்கிக் கூறப்பட்டது. இம்மாதம் 4-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் காந்திசாலை,காமராஜா் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் அதிகமாக கூடியிருந்த 7 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், கை கழுவும் திரவம் மற்றும் முகக்கவசம் அணியாதது போன்ற காரணங்களுக்காக 109 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் ரூ. 54,500 மற்றும் தெருக்களில் முகக்கவசம் அணியாத 437 நபா்களிடமிருந்து ரூ. 200 வீதம் ரூ. 87,400 உட்பட மொத்தமாக 8 நாள்களில் ரூ.1,76,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து அரசுடனும், மாவட்ட நிா்வாகத்துடனும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் ப.நாராயணன் கேட்டுக் கொண்டாா்.
படவிளக்கம்..காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் அபராதம் வசூலித்த நகராட்சி ஆணையா் ப.நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு.