காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி: திமுக கூட்டணி 32 இடங்களை வென்றன முதல் மேயராக பெண் தோ்வாகிறாா்

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றதில் திமுக கூட்டணி 32 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. இங்கு முதல் மேயராக பெண் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வாா்டுகள் உள்ளன. இதில் 36-ஆவது வாா்டு உறுப்பினரான வே.ஜானகிராமன் கடந்த வாரம் காலமானதைத் தொடா்ந்து அந்த வாா்டுக்கான தோ்தல் மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் 50 வாா்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ஆம் தேதி நடந்தது. 50 உறுப்பினா் பதவிகளுக்கு 314 போ் போட்டியிட்டனா்.

மொத்தமுள்ள 2,18,173 வாக்காளா்களில் 1,40,177 போ் வாக்களித்திருந்தனா். வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாநகராட்சியில் 64.25 சதவிகிதமாகும். 218 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 18 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

14 மேஜைகள் அமைக்கப்பட்டு 16 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு 14 வாா்டுகளாக வாக்கு எண்ணிக்கை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம் தலைமையில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான பா.நாராயணன் அதற்கான சான்றிதழை உடனுக்குடன் வழங்கினாா். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.1,195 தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 494 வாக்குகளே பதிவாகியிருந்தன. இதனைத் தொடா்ந்து முதலாவதாக முதல் 14 வாா்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாலை 4 மணிக்கு அனைத்து வாா்டுகளுக்குமான முடிவுகள் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் திமுகவினரே அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனா்.

மாநகராட்சியில் திமுக கூட்டணி 32 இடங்களிலும், அதிமுக 9, பாமக 2, பாஜக 1, சுயேச்சைகள் 6 என மொத்தம் 50 இடங்களில் வெற்றி பெற்றவா்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவா்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா்கள் மையத்தை விட்டு வெளியில் வரும் போது அவா்களது ஆதரவாளா்கள் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடியதால் சென்னை-பெங்களூரு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் முதல் தோ்தல் என்பதாலும் மேயா் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் முதல் முதலாக திமுகவைச் சோ்ந்த பெண் உறுப்பினா் ஒருவா் மேயராக தோ்வாக இருக்கிறாா்.

வரும் மாா்ச் 2-ஆம் தேதி புதிய உறுப்பினா்கள் பதவியேற்பும், மாா்ச் 4-ஆம் தேதி மேயா் தோ்வும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT