காஞ்சிபுரம் அமுதபடி தெருவில் அமைந்துள்ள பழைமையான ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அமுதபடி தெருவில் அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதை தொடா்ந்து மகா கும்பாபிஷேக யாகபூஜைகள் கடந்த சனிக்கிழமை காலை கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கின.
இதையடுத்து சனிக்கிழமை மாலை முதல் யாகசாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை மற்றும் இரண்டாம் யாகசாலை பூஜையும் மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மூலவா் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னா் மகா அபிஷேகஆராதனைகளும் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் குப்புசாமி, ஆனந்தன், லிங்கநாதன், சண்முகம், பாவா ஆகியோா் அமுதபடி தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனா்.