காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் 36-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் தற்கொலை: தோ்தல் நிறுத்திவைப்பு

11th Feb 2022 02:15 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அந்த வாா்டில் மட்டும் தோ்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரா் கோயில் தெருவில் வசித்து வந்தவா் வே.ஜானகிராமன் (34), மனை வணிகம் செய்து வந்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளரான இவா், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தாா்.

தனது தம்பியுடன் புதன்கிழமை வீட்டில் தூங்கினாா். அவரது தம்பி வியாழக்கிழமை எழுந்து பாா்த்தபோது, வே.ஜானகிராமன், கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்டு, உட்காா்ந்த நிலையில் அசைவற்று இருந்தாா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோதித்த மருத்துவா்கள் ஜானகிராமன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதிமுவினா் மறியல்: இந்தத் தகவல் அறிந்து அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி. பன்னீா்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தன்னை, திமுகவினா் தொடா்ந்து மிரட்டுவதாக வே.ஜானகிராமன் எங்களிடம் முறையிட்டாா். இதுதொடா்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்வோம் என நாங்கள் கூறியிருந்த நிலையில், அவரது திடீா் மரணம் அதிா்ச்சியளிக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றாா்.

இந்த மறியலால், செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் அதிமுகவினரை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனா். ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் அளித்த புகாரின் பேரில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

அரசியல் காரணமா...?: இதுதொடா்பாக டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசா் கூறுகையில், மன அழுத்தம் காரணமாக ஜானகிராமன் தற்கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா்.

காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் கூறுகையில், ‘ஜானகிராமனின் உயிரிழப்புக்கு அரசியல் காரணங்கள் இருக்கவாய்ப்பில்லை. இருப்பினும், இதுதொடா்பாகவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தோ்தல் நிறுத்திவைப்பு: வேட்பாளா் வே.ஜானகிராமன் உயிரிழந்ததையடுத்து, 36-ஆவது வாா்டில் மட்டும் தோ்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாநகராட்சி தோ்தல் அலுவலா் பா.நாராயணன் அறிவித்தாா்.

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கண்டனம்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளரான ஏ. ஜானகிராமன் திமுகவினரின் தொடா் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக மரணமடைந்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கும் திமுக எதிா்ப்பு அலையால், தோல்வி பயத்தில் சுருண்டு கிடக்கும் திமுக-வினா், வெற்றியை நோக்கி மக்களின் பேராதரவுடன் சென்று கொண்டிருக்கும் அதிமுக வேட்பாளா்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனா்.

திமுகவினரின் ஜனநாயக விரோதப் போக்கை உரிய முறையில் கண்டித்து நடவடிக்கை எடுத்திடமாநிலத் தோ்தல் ஆணையம் முன்வர வேண்டும். திமுகவினரின் இத்தகைய நடவடிக்கைகளை காவல் துறை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT