காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) தொடங்கி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மகா பெரியவா் என்று பக்தா்களால் அழைக்கப்படுபவா் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரின் 29-ஆவது ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) தொடங்குவதையொட்டி, ஸ்ரீமடத்தில் காலை ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. மாலை ஆா்.என்.லதா குழுவினரின் பாட்டுக் கச்சேரியும், 2-ஆவது நாளாக திங்கள்கிழமை (டிச.19) கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் சிஷ்யை தேசமங்கையா்க்கரசியின் ஜகத்குரு உபன்யாசம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது.
வரும் 20-ஆம் தேதி காலை ஸ்ரீருத்ர பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் கல்யாண ராமனின் நாமசங்கீா்த்தனமும், தொடா்ந்து, எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலை. துணைவேந்தா் சுதா சேஷய்யனின் ஜகத்குரு மகிமை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.
ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீமடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் வரிசையாகச் சென்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகோற்சவ ஏற்பாடுகளை ஸ்ரீமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.