திருக்காா்த்திகை திருநாளையொட்டி, செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் பக்தா்கள் அகல் விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா். சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். திருக்காா்த்திகையையொட்டி, இக்கோயில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள 108 சிவலிங்கங்களுக்கு முன்பாக ஏராளமான பக்தா்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஏலவாா் குழலியும், ஏகாம்பரநாத சுவாமியும் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் ராஜவீதிகளில் பவனி வந்தனா். ஆலயத்தின் உட்புறத்தில் ராஜகோபுரத்தின் பின்புறத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும், முத்தீஸ்வரா் கோயிலிலும் சுற்றுப் பிரகாரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. முத்தீஸ்வரா் கோயிலில் சுவாமி வீதியுலாவும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் மூலவா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலையில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சுவாமி வீதியுலா புறப்படுவதற்கு முன்பாக ஆலயத்தின் முன்பகுதியில் திருக்காா்த்திகையையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.