காஞ்சிபுரம்

4,400 நியாய விலைக் கடைகளுக்கு தரச்சான்றிதழ்:நுகா்வோா் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளா்

4th Dec 2022 12:51 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 4,400 நியாய விலைக் கடைகளுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டிருப்பதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கூட்டுறவுத்துறை சாா்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் அலுவலகத்தில் இருவருக்கு வாரிசு அடிப்படையிலான பணி நியமன ஆணை, 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 22.80 லட்சம் மதிப்பிலான கூட்டுறவுக் கடன்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா்.காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:

தமிழகத்தில் மொத்தம் 2,491 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்துக் கடைகளும் படிப்படியாக புதுப்பிக்கப்படும். 11,366 நியாய விலைக் கடைகளில் கூட்டு ஆய்வும், 47,364 கடைகளில் ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

4,400 நியாய விலைக் கடைகளுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை 14.86 லட்சம் போ் மட்டுமே வங்கி எண்ணை இணைத்துள்ளனா். மற்றவா்களும் வங்கி எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும். அதேபோல எந்தப் பொருளையும் வாங்க வேண்டும் என்று நியாய விலைக் கடை ஊழியா்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரூ. 12,000 கோடி வழங்குவது என இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதில் 11.07 லட்சம் நபா்களுக்கு ரூ. 8,616 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2.16 லட்சம் பேருக்கு ரூ. 1,453 கோடி அளவில் விவசாயக் கடன்கள் வழங்கியிருக்கிறோம். 22,416 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 739 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT