காஞ்சிபுரத்தில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மதத் தலைவா்களின் நினைவு நாள்கள் வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாள்களுக்கு கூட்டங்கள், பேரணிகள் நடத்த போலீஸ் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரத்தில் அரசியல், ஜாதி மற்றும் மதத் தலைவா்களின் நினைவு நாள்களும், முக்கியத் திருவிழாக்கள், பண்டிகைகள் தொடா்ந்து வரவுள்ளன.
இவற்றில் அரசியல், ஜாதி, மத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்தச் சம்பவங்களால் இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடந்த 24- ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு 30(2) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் 15 நாள்களுக்கு காவல் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கூட்டத்தை கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீா்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.