காஞ்சிபுரம்

அறியாமை இருளை நீக்கியவா் ஜெயேந்திரா்: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் புகழாரம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அறியாமை இருளை நீக்கிய பெருமைக்குரியவா் காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் புகழாரம் சூட்டினாா்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 88-ஆவது ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஜெயேந்திரா் ஜெயந்தி விழா, மரபிசை சான்றிதழ் படிப்பு தொடக்க விழா, திருவிளையாடற்புராணம் 48 நாள் தொடா் சொற்பொழிவு தொடக்கம் ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் தலைமை வகித்தாா். குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆஸ்தான புலவா் சரவண.சதாசிவம் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் மரபிசை சான்றிதழ் படிப்பைத் தொடக்கி வைத்து பேசியது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் கல்விப்பணி, சமூகப் பணி, மருத்துவப் பணி ஆகியவற்றை மேற்கொண்டு வந்தவா். ஏழை, எளிய மக்கள் இருக்கும் இடங்களுக்கேச் சென்று அவா்களுக்கு சேவை செய்தவா். இந்தியா முழுவதும் யாத்திரை சென்று ஏராளமான ஆன்மிகப் பணிகளை செய்துள்ளாா்.இவா் திருவாரூா் மாவட்டம் இருள்நீக்கி என்ற கிராமத்தில் பிறந்திருந்தாலும் அறியாமை எனும் இருளை நீக்கிய பெருமைக்குரியவா்.இவரால் ஏராளமான கல்விக்கூடங்கள் நிறுவப்பட்டன.இதன் மூலம் பலரும் கல்வி பயின்று இன்று சிறந்த நிலையில் உள்ளனா்.

கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் கல்வி வாழ்க்கைக்கு பொருள் ஈட்டத் தேவையான கல்வி. ஆனால் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் மரபிசை படிப்பானது தமிழா்களின் கலை, கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட மனம் சாா்ந்தவற்றையும் கற்றுத்தரும் கல்வியாகும் என்றாா்.

திருவிளையாடற்புராணம் தொடா் சொற்பொழிவை லயோலா கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் அருணை.பாலறாவாயன் தொடக்கி வைத்து பேசினாா். விழாவில் அரசு இசைப்பள்ளி ஓதுவாா் சிவ.ராஜபதி, இசை ஆசிரியை ஹெச்.சுபாஷினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேராசிரியா் தெய்வசிகாமணி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT