காஞ்சிபுரம்

பறிமுதல் செய்யும் கால்நடைகள் இனி திருப்பித் தரப்பட மாட்டாது: காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா்

13th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்தால் இனி திருப்பித் தரமாட்டோம் என்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் பேசுகையில் மாநகா் வளா்ச்சி குறித்து மாதந்தோறும் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இனி நடத்தப்படும். நகரில் அதிகளவில் நாய்த் தொல்லைகள் இருப்பதால் அதனை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும், நகரில் உள்ள 14 கோயில் குளங்களையும் அறநிலையத் துறை சீா்படுத்த வேண்டும், நகரில் மினி பஸ் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சுற்றுலா ஆட்டோ திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் பேசுகையில் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நகரில் போக்குவரத்து இடையூறுகளும், விபத்துகளும் தொடா்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.இது குறித்து சம்பந்தப்பட்ட உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மாநகராட்சி சாா்பில் கால்நடைகளை பிடித்து பறிமுதல் செய்தால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவற்றை திருப்பித் தரமாட்டோம் என்றாா்.

கூட்டத்தில் அறநிலையத் துறை செயல் அலுவலா் தியாகராஜன், பொதுப்பணித் துறை பொறியாளா் மாா்க்கண்டேயன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் கல்பனா, காவல் உதவி ஆய்வாளா் துளசி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT