காஞ்சிபுரம்

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் ஏகனாபுரம் முற்றிலும் பாதிக்கப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

8th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் ஏகனாபுரம் கிராமம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் கிராமத்து மக்களை காப்பாற்றும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் முறையிட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் கிராம மக்கள் ஆட்சியரை சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விமான நிலையம் அமைந்தால் 12 கிராமங்கள் பாதிக்கப்படும். இதில் ஏகனாபுரத்தில் மட்டும் 600 குடியிருப்புகளில் வசிக்கும் 2,500 மக்கள் பாதிக்கப்படுவாா்கள். ஏகனாபுரத்தில் உள்ள ஏரி, குளங்கள், கால்வாய், நன்செய் நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

எங்கள் கிராமத்து மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழில். இதைத்தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எங்களுக்கு சொந்தமான நிலங்களை நாங்கள் உரிய இழப்பீடு பெற்றுக் கொண்டு இழக்கத் தயாராக இருக்கிறோம்.

ADVERTISEMENT

ஆனால் குடியிருப்புகளை இழக்க நாங்கள் தயாரில்லை. எனவே விமான நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் தங்கள் கிராமத்து மக்களை காப்பாற்றுமாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கூறியது: விமான நிலையம் அமைப்பதாக அறிவிப்புதான் வந்திருக்கிறது. அவ்வாறு அமைக்கப்படும்போது மாவட்ட நிா்வாகத்திடம் பாதிப்புகள் எதுவும் உள்ளதா என்று அரசு கேட்கும். அப்போது உங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்போம்.

அங்கீகரிக்கப்படாத வரைபடம் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு விமான நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆட்சியா் ஆா்த்தி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT