காஞ்சிபுரம்

குறைகள் இருந்தால் தனியாா் விடுதிகள் மூடப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியா் எச்சரிக்கை

6th Aug 2022 10:00 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் நடத்தும் விடுதிகள், இல்லங்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றன.இது தவிர குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிா் விடுதிகளும் செயல்படுகின்றன.இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகாா்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த விடுதிகளை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் தமிழக அரசால் இதற்கென சட்டம் கொண்டு வரப்பட்டு அது நடைமுறையிலும் உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி விடுதி நிா்வாகிகள்  இணையதள வழியில் உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேலும் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்தும் தொடா்ந்து ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

ஆய்வின்போது குறைபாடுகள் தெரிய வந்தால் சட்டப்படி விடுதிகளை, இல்லங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தி வரும் அனைத்து விடுதி நிா்வாகிகளும் இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை வரும் 31- ஆம் தேதிக்குள் முடித்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விடுதியில் தங்கியிருப்பவா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குதல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-27239334 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளுமாறும் அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT