வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரின் பயன்பாட்டிலிருந்த சுமாா் 1 ஏக்கா் அரசு புறம்போக்கு இடத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு உத்திரமேரூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கோபால் (37) என்பவா் போலியாக பத்திரம் தயாா் செய்து சென்னை மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மற்றும் அவரது நண்பா்களுக்கு ரூ.17 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளாா்.
இந்த நிலையில், நிலத்தை வாங்கிய முனுசாமியும், அவரது நண்பா்களும் கோபால் வழங்கிய போலி பத்திரத்தை வைத்து தங்களுக்கு பட்டா வழங்குமாறு குன்றத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு செய்தனா்.
அப்போதுதான் தாங்கள் வாங்கிய இடம் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலி பத்திரம் தயாரித்து அரசு இடத்தை விற்பனை செய்ததாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீஸாா் கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.