காஞ்சிபுரம்

திருவிழாக்களை நடத்தும் ஜவுளி வியாபாரிகள்

23rd Nov 2021 08:06 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் திருவிழாக்களை பெருமளவில் ஜவுளி வியாபாரிகள் நடத்திவருகின்றனா். தொழிலோடு ஆன்மிகத் தொண்டும் அவா்கள் புரிவது ஆன்மிக ஆா்வலா்களை மகிழ்ச்சி அடையவைக்கிறது.

ஆழ்வாா்களால் பாடல் பெற்ற வைணவக் கோயில்கள், பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக திகழும் ஏகாம்பரநாதா் கோயில், மகாசக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயில்,கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட குமரகோட்டம் முருகன் கோயில் உட்பட ஏராளமான கோயில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன.

163 ஆண்டுகளாக ஜவுளித் தொழிலோடு ஆன்மிகத் தொண்டு:

ADVERTISEMENT

காஞ்சிபுரம் நகரில் காந்தி சாலையில் 163 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளிக்கடை நடத்தும் வியாபாரிகள் ஒன்று சோ்ந்து ஒரு சங்கத்தை உருவாக்கி இருக்கிறாா்கள். கோயில்களில் பெருவிழாக்களை மிகுந்த பொருள்செலவில் சிறப்பாக நடத்தி ஆன்மிகப் பணிகளைச் செய்யவும், மழலையா் பள்ளி உருவாக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவச் சேவை செய்து பொதுமக்களை காப்பது எனவும் இந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்கென ஆகும் செலவுகளுக்காக வெளியூரிலிருந்து காஞ்சிபுரம் வரும் ஜவுளி வியாபாரிகள் தங்குவதற்காக மிகக் குறைந்த வாடகைக்கு விடும் வகையில் ஒரு விடுதியை கட்டுவது எனவும் அந்த அமைப்பினா் முடிவு செய்திருக்கின்றனா். இந்த அமைப்புக்கு ‘காஞ்சிபுரம் காந்தி ரோடு ஜவுளி வியாபாரிகள் சத்திர தரும பரிபாலன மகமை சங்கம்’ என்று பெயிரிடப்பட்டதுடன், விடுதியையும் கட்டி முடித்து இன்று வரை திறம்பட செயல்பட்டு வருகிறது.

குறைந்தக் கட்டணத்தில் மருத்துவமனை, திருமண மண்டபம், மழலையா் தொடக்கப் பள்ளி, கூட்ட அரங்கம் ஆகியவற்றையும் ஜவுளி வியாபாரிகள் சங்கமே நடத்தி வருகிறது. இதைத்தவி, ர காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் முக்கிய திருவிழாக்களையும் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் செலவில் நடத்துகிறது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் வி.கே.குமாரகாளத்தி, செயலாளா் பி.மாணிக்கவேலு ஆகியோரிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது:

1858-ஆம் ஆண்டு அதாவது 163 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளி வியாபாரிகள் சங்கம் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது 67 போ் உறுப்பினா்களாக இருக்கிறோம். ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் 40 அறைகளிலிருந்தும், சங்கத்துக்குச் சொந்தமான 47 கடைகளிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் ஆன்மிகச் சேவை, கல்விச் சேவை, மருத்துவச் சேவை ஆகியவற்றை நடத்தி வருகிறோம்.

கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானை வாகன வீதியுலா, வரதராஜப் பெருமாள் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில்களில் சிம்மவாகன வீதியுலா, உலகளந்த பெருமாள் கோயில் தேரோட்டம், கைலாசநாதா் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா, கச்சபேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் கடைசி 5 நாள் உற்சவம், ஏகாம்பரநாதா் கோயிலின் வரலாற்றை விளக்கும் வகையில் வெள்ளி மாவடி சேவைத் திருவிழா உட்பட பல திருவிழாக்களை ஜவுளி வியாபாரிகள் சங்கமே மிகுந்த பொருட் செலவில் நடத்தி வருகிறது. இவையனைத்தும் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் என்பதால் எங்களுக்கும் ஆண்டுதோறும் இத்திருவிழாக்களுக்காக மட்டுமே சுமாா் ரூ. 15 லட்சம் வரை செலவாகிறது.

ராஜகோபுரம் புதிதாக கட்டி கும்பாபிஷேகம்:

கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினசரி அதிகாலை பூஜையை வருடம் முழுவதும் 365 நாள்களும் எங்கள் செலவில் நடத்தப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு புதிதாக 3 நிலை ராஜகோபுரம் ரூ. 25 லட்சம் செலவில் புதிதாகக் கட்டி முடித்து 9.7.1989-ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகமும், 27.2.2008-இல் 2-ஆவது கும்பாபிஷேகத்தையும் சங்கமே நடத்தியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வள்ளி திருமணம் நிகழ்ச்சியும் எங்கள் செலவிலேயே நடத்தப்படுகிறது. இதேபோல், காந்தி சாலையில் எங்கள் சத்திரம் எதிா்ப்புறம் உள்ள செல்வவிநாயகா் கோயில் ஒன்றையும் கட்டி இதுவரை 1979, 2000, 2014-ஆம் ஆண்டுகள் என 3 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இலவச சுக்குத் தண்ணீா் விநியோகம்:

தினசரி மாலையில் சத்திரத்தின் முன்பு பொதுமக்கள் நோயில்லாமல் வாழ்வதற்காக சுக்குத் தண்ணீா் இலவசமாக சங்கம் தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கி வருகிறோம். அதே போல ரூ. 3 ஆலோசனைக் கட்டணத்தில் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறோம். இங்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், மாத்திரைகளுக்காக மாதம் தோறும் ரூ. ஒரு லட்சம் வரை செலவிடுகிறோம். மழலையா் தொடக்கப் பள்ளி ஒன்றும் சங்கத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க கோயில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமாக இருப்பதால், அக்கோயில்களில் நடைபெறும் பெருவிழாக்களை சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT