காஞ்சிபுரம்

நகைக் கடன் தள்ளுபடி குறித்த பட்டியல் தயாா்: அமைச்சா் ஐ.பெரியசாமி

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

 தங்க நகைக் கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபாா்க்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. விரைவில் பயனாளிகளுக்கு தங்க நகைகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

மாநில அளவிலான 68-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்தில் உள்ள கரசங்காலில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் கூடுதல் பதிவாளா் மாதவன் வரவேற்றாா். இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்ஆகியோா் கலந்துகொண்டு, தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினா். பின்னா், அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியது:

பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்குத் தேவையான கடன்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற மகளிா் சுய உதவிக் குழு கடன்கள், விவசாயக் கடன்கள் மற்றும் தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலின் போது முதல்வா் மு.க. ஸ்டாலின் அளித்த 5 சவரன் தங்க நகைக் கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபாா்க்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. விரைவில் எவ்வித முறைகேடும் இன்றி பயனாளிகளின் வீடு தேடி தங்க நகைகள் கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பில் ஒப்படைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்), ராகுல்நாத் (செங்கல்பட்டு), மக்களவை உறுப்பினா்கள் ஜி.செல்வம், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூா்), சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சிபுரம்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக கூட்டுறவுத்துறை காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் எஸ்.லட்சுமி கூட்டுறவு உறுதிமொழியை வாசிக்க கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT