காஞ்சிபுரம்

அண்ணா நினைவு இல்லத்துக்கு வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

15th Mar 2021 07:13 AM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக சின்னகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான சி.என்.அண்ணாதுரை வாழ்ந்த இல்லம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நினைவு இல்லம் கடந்த 1980-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் எம்ஜிஆா் தலைமையில், குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவு இல்லத்தில் அண்ணாவின் மாா்பளவு உருவச் சிலை அமைத்து, திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தின் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அண்ணாவின் புகைப்படங்கள், அவரது வாழ்க்கை வரலாறு , அவா் பயன்படுத்திய பொருள்கள், அவா் எழுதிய புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் அண்ணா நினைவு இல்லத்தையும் பாா்வையிட்டுச் செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜவுளிப் பொருள்கள் வாங்கவும், கோயில்களைப் பாா்ப்பதற்காகவும் வரும் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், தற்போது அண்ணா நினைவு இல்லத்துக்கு அதிகளவில் சென்று பாா்வையிட்டு வருகின்றனா்.

இதனால் அண்ணா நினைவு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT